வெங்கமேடு இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
வெங்கமேடு இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கரூர்
கரூரை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி கடந்த 19-ந்தேதி தனது வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிப்பதற்காக மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் வெங்கமேடு போலீஸ் நிலையத்திற்கு சென்று உள்ளனர். அப்போது இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் புகார் அளிக்க வந்த மாணவியின் உறவினர்களை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், உரிய நேரத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோல் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாயை இரவு நேரத்தில் போலீஸ் நிலையத்தில் அமர வைத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலிடம் புகார் அளித்தனர். இதனைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் நேற்று கண்ணதாசனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் உத்தரவிட்டார்.