இருநாட்டு மீனவர்கள் இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு விரைவில் ஏற்பாடு

இருநாட்டு மீனவர்கள் இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று ராமேசுவரத்தில் இந்திய தூதரக அதிகாரி கூறினார்.

Update: 2021-11-21 17:51 GMT
ராமேசுவரம், 
இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று ராமேசுவரத்தில் இந்திய தூதரக அதிகாரி கூறினார்.
தூதரக அதிகாரி
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரி கோபால்பக்லே நேற்று ராமேசுவரம் வருகை தந்தார். அவர் கார் மூலமாக தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு சென்று கடற்கரை பகுதியை பார்வையிட்டார். பின்னர் புயலால் அழிந்து போன கிறிஸ்தவ ஆலயம் உள்ளிட்ட கட்டிடங்களையும் பார்வையிட்டார்.தொடர்ந்து மீன்பிடித் துறைமுக பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களிடம் தனுஷ்கோடி கடல் பகுதியில் உள்ள கடலின் ஆழம் எவ்வளவு என்பது குறித்தும் சிறிது நேரம் பேசினார். இதையடுத்து பாம்பன் குந்துகால் கடற்கரையில் ரூ.70 கோடி நிதியில் கட்டப்பட்டுள்ள ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம், மீன்பிடி விசைப்படகுகள், தூண்டில் நரம்பு உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மீன்களை பதப்படுத்தக்கூடிய குளிர்சாதன கிட்டங்கியையும் பார்வையிட்டார். அப்போது மாவட்ட கலெக்டர் சங்கர்லால்குமாவத், மீன்துறை கூடுதல் ஆணையாளர் சஜன்சிங், கூடுதல் இயக்குனர் ஆறுமுகம், வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், சமூகநலத்துறை தாசில்தார் அப்துல்ஜபார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
ஆலோசனை கூட்டம்
இதைதொடர்ந்து ராமேசுவரத்தில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் போஸ், தேவதாஸ், எமரிட், சகாயம் மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் எஸ்.பி.ராயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க தலைவர் என்.ஜே.போஸ் கூறும்போது,
பாரம்பரிய கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க ஏற்பாடு செய்து தரவேண்டும். இலங்கை கடற்படையால் பிடித்து வைத்துள்ள படகுகளை மீட்டு தமிழகம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை கடற்படை தாக்குதல் இல்லாமல் மீனவர்கள் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
நிவாரணம்
கூட்டத்தில் கலந்து கொண்ட நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் கூறும்போது, பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்களும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக மீன்பிடிக்க ஏற்பாடு செய்து தரவேண்டும். இருநாட்டு மீனவர்களும் சந்தித்து பேசுவதற்கான பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும். விசைப்படகு மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது போல் இலங்கை கடற்படையால் பிடித்து சேதமான நாட்டுப்படகு மீனவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு
கூட்டத்தில் மீனவர்கள் மத்தியில் இலங்கையை சேர்ந்த இந்திய தூதரக அதிகாரி பேசியதாவது:- 
ராமேசுவரம், பாம்பன் தனுஷ்கோடி பகுதியில் மீன்வளத்துறை மூலம் மீனவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி வசதிகள் குறித்து பார்வையிடுவதற்காக வந்துள்ளேன். எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க வந்தால் கண்டிப்பான முறையில் மீனவர்கள் மீது கொலை செய்யும் நோக்கத்தில் எந்த ஒரு தாக்குதல் நடத்தக் கூடாது என கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றோம். இலங்கை மீனவர்களும், இந்திய மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தான் விரும்புகின்றனர். இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தைக்கு அரசிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கு ஏற்பாடு செய்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
ராமேசுவரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், சிறையில் அடைக்கப்படும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று மீனவர்களை இந்திய தூதரக அதிகாரி சந்தித்து பேசி இருப்பது முக்கியத்தும் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்