நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க.வினர் நாளை மறுநாளுக்குள் விருப்பமனு தாக்கல் செய்யலாம்

அமைச்சர் பொன்முடி தகவல்

Update: 2021-11-21 17:11 GMT
விழுப்புரம், 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் (அடுத்த மாதம்) மாதத்துக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து நகர்ப்புற தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினர் விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க. தலைமை அறிவித்திருந்தது. அதன்அடிப்படையில் விழுப்புரம் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட விழுப்புரம் நகராட்சி, வளவனூர் பேரூராட்சி, விக்கிரவாண்டி பேரூராட்சி, திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி, அரகண்டநல்லூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வினியோகம் செய்யும் நிகழ்ச்சி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். டாக்டர் ஆர்.லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் புஷ்பராஜ், மைதிலி ராஜேந்திரன், முருகன், மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்து கொண்டு விருப்ப மனுக்கான விண்ணப்பங்களை கட்சியினரிடம் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் உங்களுக்கிடையே போட்டி இல்லாமல் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி விருப்ப மனுக்களை வழங்கிட வேண்டும். நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் தலா ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி கவுன்சிலருக்கு தலா ரூ.2,500 கட்டணமாக செலுத்திட வேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் 50 சதவித கட்டணத்தை செலுத்தினால் மட்டும் போதுமானது. வார்டுகள் ஒதுக்கீடு குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும். அதனைத் தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்கள் நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்