ஜெய்பீம் பட விவகாரம்: நடிகர் சூர்யாவின் உருவ பொம்மையை எரித்து பா.ம.க.வினர் போராட்டம்
ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவின் உருவ பொம்மையை பா.ம.க.வினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
விருத்தாசலம்,
நடிகர் சூர்யா நடித்து சமீபத்தில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததாகவும், இழிவு படுத்தியதாகவும் இதனால் தமிழகத்தில் ஜாதி மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவும் கூறி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடிகர் சூர்யா மற்றும் அந்த படத்தின் திரைப்பட இயக்குனர் மீது போலீஸ் நிலையங்களில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.
உருவபொம்மை எரிப்பு
அந்த வகையில் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள எடச்சித்தூர் கிராமத்தில் விருத்தாசலம் வடக்கு ஒன்றிய பா.ம.க. சார்பில் ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பாக்கியராஜ் தலைமையில் நடிகர் சூர்யா மற்றும் படத்தின் இயக்குனரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நடிகர் சூர்யாவின் உருவபொம்மையை அவர்கள் தீ வைத்து எரித்தனர். இதில் கிளைத்தலைவர் இளவரசன், கிளைச் செயலாளர் கல்வராயன், ஒன்றிய துணை செயலாளர் தினேஷ்குமார், சுப்பிரமணியன், முருகன் உள்ளிட்ட பா.ம.க.மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
இதேபோல், விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தில் நடிகர் சூர்யாவை கண்டித்து கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளான பெண்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு நடிகர் சூர்யா, படத்தின் இயக்குனரை கண்டித்து கோஷங்களை எழுப்பியதுடன், நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக அந்த பகுதியில் ஊ.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.