தினத்தந்தி புகார் பெட்டி
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சுகாதாரசீர்கேடு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த புதுதெரு பகுதியில் உடையார் தெரு உள்ளது.
இந்த தெருவில் குப்பைகள் அகற்றப்படாமல் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், மழைநீரில் குப்பைகள் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-செந்தில், மன்னார்குடி.
வணிக வளாகம் கட்டப்படுமா?
திருவாரூர் பனகல் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பயன்அடைந்து வந்தனர். இந்த நிலையில் கட்டிடம் பழுதடைந்ததால், கட்டிடம் இடிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை வணிக வளாகம் கட்டப்படாமல் அந்த பகுதி காலி இடமாக போடப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பனகல் சாலையில் மீண்டும் வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுப்பார்களா?
-சாமி, திருவாரூர்.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருகே கதிராமங்கலம் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இந்த மின்கம்பிகள் மரக்கிளைகளுக்கு இடையே செல்கின்றன. அதுமட்டுமின்றி, அந்த பகுதியில் மின்கம்பிகளை உரசி செல்லும் வகையில் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட விளம்பர பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, தொடர் மழை பெய்து வருவதால் மின்கம்பிகள் மரக்கிளைகள் மற்றும் விளம்பர பேனர் மீது உரசுவதால் தீப்பொறி வெளிவருகிறது. இதனால், அந்த பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றன. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்த நடவடிக்கை எடுப்பார்களா?
-பிரகாஷ், மயிலாடுதுறை.
குரங்குகள் தொல்லை
நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவைகள் வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்கள், செல்போன்கள், துணி உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்று அட்டகாசம் செய்கின்றன. மேலும், குழந்தைகள், பெண்கள், முதியவர்களை விரட்டி செல்கின்றன. அதுமட்டுமின்றி குரங்குகள் சாலையில் அங்கும், இங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி விபத்துகளிலும் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
-முஸ்தபா, நாகை.