கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 2-வது நாளில் தொழிலாளி திடீர் சாவு
மணல்மேடு அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 2-வது நாளில் திடீரென தொழிலாளி உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது மகன், போலீசில் புகார் கொடுத்துள்ளார்.;
மயிலாடுதுறை:
மணல்மேடு அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 2-வது நாளில் திடீரென தொழிலாளி உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது மகன், போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
தொழிலாளி
மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர் ஊராட்சி புரசங்காடு கிராமத்தில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் காலனி தெருவைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான சாமிதுரை (வயது 57) என்பவர் தடுப்பூசி போட்டு கொண்டார்.
இதை தொடர்ந்து அவருக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் நேற்று மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அங்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு சாமிதுரை உயிரிழந்தார்.
போலீசில் புகார்
இதுகுறித்து சாமிதுரை மகன் கொளஞ்சிநாதன் தனது தந்தை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பக்க விளைவு ஏற்பட்டு இறந்ததாக மணல்மேடு போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சாமிதுரை உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 2-வது நாளில் தொழிலாளி ஒருவர் உடல்நல குறைவு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.