தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரம்
கூடலூர்- ஊட்டி இடையே தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கூடலூர்
கூடலூர்- ஊட்டி இடையே தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டி, மேட்டுப்பாளையத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வழியாக சரக்கு லாரிகள் உள்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதேபோன்று கூடலூர், பந்தலூர் தாலுகா மக்களும் சமவெளி பகுதிக்கு செல்வதற்கு அந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கூடலூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சாலை 52 கிலோ மீட்டர் தூரம் கொண்டது.
இதில் கூடலூரை அடுத்து மேல்கூடலூர், சில்வர் கிளவுட், 27-வது மைல், தவளமலை வரை தேசிய நெடுஞ்சாலை மிக குறுகலாக இருந்தது. இதனால் வாகனங்கள் சீராக செல்ல வழியின்றி அடிக்கடி விபத்துகளும் நடைபெற்றது.
அகலப்படுத்தும் பணி
இதுதவிர டி.ஆர். பஜார், நடுவட்டம், கூடலூர் உள்பட பல இடங்களில் சிறிய பாலங்கள் இருந்தது. அங்கு சீசன் காலங்களில் வாகன நெருக்கடி ஏற்பட்டது.
எனவே கூடலூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கூடலூர்- ஊட்டி இடையே சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மும்முரம்
இதுவரை கூடலூரில் இருந்து டி.ஆர். பஜார் வரை சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மண்சரிவு ஏற்படாத வகையில் ராட்சத தடுப்பு சுவர் கட்டும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
இதனால் வாகன போக்குவரத்து சீராக நடைபெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், கூடலூர்-ஊட்டி சாலையை அகலப்படுத்தும் பணி 60 சதவீதம் நடைபெற்று உள்ளது. மீதமுள்ள பணிகள் முடிவடைய விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.