அரசு பள்ளி முன்பு குவிந்து கிடக்கும் குப்பை
குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக குப்பைகள் குவிந்துள்ளன.
குமரலிங்கம்,
குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக குப்பைகள் குவிந்துள்ளன. இதனால் சுகாதார சீ்ர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
குப்பைத்தொட்டி
குமரலிங்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் குமரலிங்கம், பெருமாள்புதூர், சாமராயபட்டி, ருத்ரா பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து 850 மாணவமாணவியர் படித்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு தற்போது பள்ளிகள் இயங்க ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் மழை பெய்து வருவதால் காய்ச்சல் சளி போன்ற உபாதைகளுக்கு பொதுமக்கள் ஆளாகின்றனர்.
இதற்கிடையில் பள்ளியின் முன்பாக குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பேரூராட்சி நிர்வாகமும் தினமும் காலையில் வண்டிகள் மூலமாக குப்பைகளை சேகரித்து தான் வருகிறார்கள். ஆனாலும் அப்பகுதி மக்கள் குப்பைகளை வீட்டில் வைத்து குப்பை வண்டி வரும்போது கொட்டாமல் பள்ளிக்கு முன்பாக கொட்டி விட்டு சென்று விடுகிறார்கள்.
அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி நிரம்பி பள்ளி வளாக சுவர் அருகிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்படுகிறது.
வேறு இடத்தில் வைக்க வேண்டும்
குமரலிங்கம் பேரூராட்சி நிர்வாகம் பள்ளி மாணவ மாணவிகளின் சுகாதாரத்தை கருத்தில்கொண்டு பள்ளியின் முன்பாக உள்ள குப்பை தொட்டி அகற்றி வேறு இடத்தில் வைத்து விட வேண்டும் என்றும், அப்பகுதியில் வசிக்கின்ற மக்கள் அவர்கள் வீட்டில் உள்ள குப்பைகளை வீட்டில் வைத்திருந்து குப்பை வண்டி வரும்போது பேரூராட்சி நிர்வாகத்திற்கு உதவிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.