கோவில்பட்டியில் சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த கோவில் பூசாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

கோவில்பட்டியில் சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த கோவில் பூசாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

Update: 2021-11-21 11:52 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து ஓராண்டாக குடும்பம் நடத்தி வந்த கோவில் பூசாரியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவில் பூசாரி
கோவில்பட்டி எட்டயபுரம் ரோடு சண்முகா தியேட்டர் எதிரில் உள்ள கலங்கடி முனியசாமி கோவிலில் பூசாரியாக இருப்பவர் சங்கரலிங்கம் மகன் பாலமுருகன் (வயது 27). இவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கடந்த ஓராண்டாக குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் தெரிந்ததும் தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலர் ஜெயக்கொடி பூசாரி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார். இதில் சிறுமியை பாலமுருகன் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
போக்சோ சட்டத்தில் கைது
இதை தொடர்ந்து பூசாரி பாலமுருகன் மீது குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும்படி கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சமூகநல அலுவலர் புகார் செய்தார்.
இதுகுறித்து கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி, பூசாரி பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
கைதான பாலமுருகன் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்