போலீஸ் நிலையம் அருகே அடுத்தடுத்து 2 கடைகளில் பணம்-பொருட்கள் திருட்டு
திருவள்ளூர் மப்பேடு போலீஸ் நிலையம் அருகே அடுத்தடுத்து 2 கடைகளில் பணம்-பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் மப்பேடு போலீஸ் நிலையம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல அவர் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ரூ.22 ஆயிரம் பணமும், 5 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களும் திருட்டு போனது தெரியவந்தது.
அதேபோல அருகே இருந்த துணி கடையின் பூட்டையும் உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்று ரூ.20 ஆயிரம், மற்றும் சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள துணிகளையும் திருடிச்சென்றது தெரியவந்தது. இது சம்பந்தமாக மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.