பள்ளிக்கூட வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு
தென்காசியில் பள்ளிக்கூட வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;
தென்காசி:
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது. அதன்படி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 95 வாகனங்களை தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன.
அவற்றை தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
வாகனங்களின் தகுதிச்சான்று உள்ளிட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். மேலும் வாகனங்களில் அவசரவழி, தீயணைப்பான் கருவி, வேக கட்டுப்பாட்டு கருவி, கண்காணிப்பு கேமரா, முதலுதவி பெட்டி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளனவா? என்பதையும் பார்வையிட்டு உறுதிப்படுத்தினர்.
இவற்றில் குறைபாடுடைய 25 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்யுமாறு அறிக்கை அளிக்கப்பட்டது. 2 வாகனங்களுக்கு தகுதிச்சான்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.