நம்பியூர் பகுதியில் தொடர் மழை ஏரி-குளங்கள் நிரம்பியது; 2 வீடுகள் இடிந்து விழுந்தன
நம்பியூர் பகுதியில் பெய்த தொடர்மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது. 2 வீடுகள் இடிந்து விழுந்தன.;
ஈரோடு
நம்பியூர் பகுதியில் பெய்த தொடர்மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது. 2 வீடுகள் இடிந்து விழுந்தன.
பலத்த மழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதேபோல் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் 12 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வேமாண்டம்பாளையம், எம்மாம்பூண்டி, ஆவரங்காடு, சாவக்கட்டு பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியது. இதன் காரணமாக சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏரி, குளம்- குட்டைகள் நிரம்பி வழிகிறது.
மேலும் நம்பியூர் அருகே வேமாண்டம்பாளையம் பகுதியில் குளம் உள்ளது. தொடர்மழையால் இந்த குளம் நிரம்பி வழிந்து ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நம்பியூர் - புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் மின்சார வினியோகமும் துண்டிக்கப்பட்டது.
2 வீடுகள் இடிந்தன
நம்பியூர் அருகே மொட்டணம் கிராமம் பழையூரில் வசித்து வரும் பாட்டப்பா (வயது 72) என்பவரது வீட்டிற்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அவர் வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார்கள். சிறிதுநேரத்தில் அவரது வீடு இடிந்து விழுந்தது.
இதேபோல் நம்பியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட புதுசூரி பாளையம் பகுதியில் வசித்து வந்த சென்னியப்பன் என்பவரது வீட்டின் சுவரும் இடிந்து விழுந்து சேதமானது. 2 வீடுகளிலும் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 12 மில்லி மீட்டர் அளவில் மழை பதிவானது.
நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளின் உறுதித்தன்மையை நம்பியூர் தாசில்தார் மாரிமுத்து ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
அந்தியூர்
இதேபோல் பர்கூர் மலைப்பகுதிக்கு உள்பட்ட தேவர்மலை, ஈரெட்டி, கடையரெட்டி, பர்கூர், தாமரைக்கரை, தாளக்கரை, கொங்காடை, வெள்ளிமலை, ஊசிமலை போன்ற 33 மலை கிராமங்களில் உள்ள விவசாயிகள் ராகி, மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், மலைநெல் போன்றவற்றை பயிரிட்டுள்ளார்கள். இந்தநிலையில் அந்தியூர் பகுதிகளில் பெய்து வந்த தொடர்மழையால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.
5 ஏரிகள் நிரம்பின
மேலும் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீரால் கெட்டி சமுத்திரம் ஏரி நிரம்பியது. மேலும் அந்தியூர் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி ஆகிய ஏரிகளும் நிரம்பியது. மேலும் அந்தியூர் பகுதியில் உள்ள எண்ணமங்கலம் ஏரி, கரும்பாறை ஏரி, தண்ணீர் பள்ளம் ஏரி ஆகிய ஏரிகளும் நிரம்பும் நிலையில் உள்ளன.
அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.