கடந்த ஆண்டைவிட பாபநாசம் அணையில் கூடுதல் நீர் இருப்பு

தொடர் மழை காரணமாக கடந்த ஆண்டைவிட பாபநாசம் அணையில் கூடுதல் நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2021-11-20 21:27 GMT
நெல்லை,:
நெல்லை மாவட்டத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 139.75 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,166 கன அடியாக அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. பாசனத்துக்கு வினாடிக்கு 1,616 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மீண்டும் மெல்ல உயர்ந்து 140.05 அடியாக உள்ளது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 145.63 அடியாக உள்ளது. 

இதுதவிர அணைகளின் நீர்இருப்பு விகிதம் கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது. பாபநாசம் அணையை பொறுத்தவரை கடந்த  ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் தேதி நிலவரப்படி 125 அடி தண்ணீர் இருந்தது. அதாவது 80.33 சதவீதம் நீர் நிரம்பி இருந்தது. தற்போது நேற்றைய நிலவரப்படி 140.05 அடியாக நீர்மட்டம் உள்ளது. இது 96.60 சதவீதம் நீர்இருப்பு ஆகும். இதேபோல் சேர்வலாறு அணையில் கடந்த ஆண்டு 142.91 அடியும், தற்போது 145.63 அடியும் தண்ணீர் உள்ளது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் கடந்த ஆண்டை விட சற்று குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டு 93.15 அடியாகவும், தற்போது 92.30 அடியாகவும் நீர் இருப்பு உள்ளது. வடக்கு பச்சையாறு அணையில் நீர்இருப்பு கடந்த ஆண்டு 17 அடியாகவும், தற்போது 27 அடியாகவும் உள்ளது.

நம்பியாறு அணையில் கடந்த ஆண்டு 10.46 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. ஆனால் தற்போது முழு உயரமாக 22.96 அடி தண்ணீர் நிரம்பி உபரிநீர் வெளியேறி கொண்டிருக்கிறது. இதேபோல் கொடுமுடியாறு அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு 37.25 அடியாகவும், நேற்றைய நிலவரப்படி 50.50 அடியாகவும் உள்ளது. 

மேலும் தாமிரபரணி ஆற்றில் ஓடுகிற தண்ணீர் கால்வாய்கள் மூலம் குளங்களுக்கும், நேரடி பாசனத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளது. கன்னடியன் கால்வாயில் 300 கன அடி, கோடகன் கால்வாயில் 150 கன அடி, மருதூர் மேலக்கால்வாயில் 700 கன அடி, கீழக்கால்வாயில் 355 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிசான நெல் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் நடப்பாண்டில் நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை அதிகபட்ச மழை பெய்துள்ளது. அம்பை பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 242 மில்லி மீட்டரும், இந்த ஆண்டு 290 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. சேரன்மாதேவியில் கடந்த ஆண்டு 175 மில்லி மீட்டரும், தற்போது 315 மில்லி மீட்டரும் பெய்துள்ளது. ஆனால் பாபநாசத்தில் கடந்த ஆண்டு 479 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஆனால் தற்போது 187 மில்லி மீட்டரே பதிவாகி உள்ளது. இதேபோல் ராதாபுரம், மூைலக்கரைப்பட்டி, நெல்லை, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளிலும் கடந்த ஆண்டை விட தற்போது அதிக அளவு மழை பெய்து உள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
அம்பை -6, சேரன்மாதேவி -3, பாளையங்கோட்டை -3, நெல்லை -1, மணிமுத்தாறு -5, பாபநாசம் -17, சேர்வலாறு -8.

மேலும் செய்திகள்