வளர்ப்பு தந்தையால் உயிரோடு எரிக்கப்பட்ட சிறுமி பலி
பணகுடி அருகே வளர்ப்பு தந்தையால் உயிரோடு தீவைத்து எரிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
பணகுடி:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் உள்ள பெரியவிளையை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (வயது 45). இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து அந்தோணி ராஜ், அதே பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த சுஜா (33) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். சுஜாவுக்கு ஏற்கனவே முதல் கணவர் மூலம் 2 மகள்கள், ஒரு மகன் உண்டு.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அனைவரும் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு பாரதிநகரில் வாடகை வீட்டில் குடியேறினர். கணவன்-மனைவி அங்குள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுஜாவின் கடைசி மகள் மகேஸ்வரி (10) அந்த பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் பொருட்களை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடைக்காரர் அந்தோணிராஜிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டிற்கு வந்தார். அங்கு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்த மகேஸ்வரியை கண்டித்தார். மேலும் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து சிறுமி மீது ஊற்றி உயிரோடு தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது.
இதில் அலறிய மகேஸ்வரி ஓடி வந்து தனது வளர்ப்பு தந்தை அந்தோணி ராஜை கட்டிப்பிடித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற 2 குழந்தைகள் அலறியடித்து வெளியே ஓடினார்கள். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் வெளியே சென்ற சுஜா ஆகியோர் வந்தனர். தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பணகுடி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலையில் மகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தாள். இதையடுத்து பணகுடி போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி அந்தோணி ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வளர்ப்பு தந்தையால் உயிரோடு தீவைத்து எரிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.