பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி அழகுகலை நிபுணர்கள் ஆர்ப்பாட்டம்
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி அழகுகலை நிபுணர்கள் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:
கோவையில் பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் கூறப்பட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோவையில் பள்ளி மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறையை எதிர்த்தும், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று அழகுகலை நிபுணர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்க தலைவி மகேஸ்வரி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அழகு நிலையங்கள் நடத்தி வரும் பெண்களும், அழகுகலை நிபுணர்களும் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், பாலியல் தொல்லை செய்வோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.