திருச்செங்கோடு நகர செயற்குழு கூட்டம்: தி.மு.க. 2 அணியினர் மோதலால் பரபரப்பு

திருச்செங்கோடு நகர செயற்குழு கூட்டம்: தி.மு.க. 2 அணியினர் மோதலால் பரபரப்பு

Update: 2021-11-20 21:05 GMT
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு நகர தி.மு.க. சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு வழங்குவது தொடர்பான செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மாதேஸ்வரன், பெருமாள், ராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சுரேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு எந்தவித பாகுபாடு இன்றி தி.மு.க. 33 வார்டுகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றும், கட்சியில் சிலர் மதிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி பேசினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. 
இதையடுத்து நகர தி.மு.க.வில் 2 பிரிவுகளாக செயல்படுபவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி பேசி கொண்டிருந்த நிலையில், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் தாண்டவன் கார்த்திகேயன் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக தெரிகிறது. இதனால் 2 அணியினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது ஆத்திரத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்தாக தெரிகிறது. இதில் நகர தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார் என்பவரின் சட்டை கிழிந்தது. 
பின்னர் விருப்பமனு வழங்க மாவட்ட தி.மு.க.வால் நியமிக்கப்பட்ட திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் தங்கவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜிதேந்திரன், எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் 2 அணியிரையும் அமைதி காக்கும்படி கேட்டு கொண்டதன்பேரில் இரு பிரிவினரும் மோதலை நிறுத்தினர். இதையடுத்து முன்னாள் நகர செயலாளர் நடேசன், நகர பொறுப்புக்குழு தலைவர் தாண்டவன் கார்த்திகேயன் ஆகியோர் பேசினர். இந்த சம்பவம் மாவட்ட தி.மு.க.வில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்