சேலம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை-டி.வி.பார்த்ததை தாய் கண்டித்ததால் விபரீதம்

சேலம் அருகே டி.வி. பார்த்ததை தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-11-20 21:05 GMT
சேலம்:
சேலம் அருகே டி.வி. பார்த்ததை தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10-ம் வகுப்பு மாணவி
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டி வனத்துறை குடியிருப்பை சேர்ந்தவர் குமார். இவர், வனக்காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குமாரை அவரது மனைவி பிரிந்து சென்று தனியாக வசித்து வருகிறார்.
இதனிடையே, கணவரை இழந்த ராணி என்பவரை வனக்காப்பாளர் குமார் 2-வது திருமணம் செய்து கொண்டார். ராணியின் மகள் ஐஸ்வர்யா (வயது 16), அங்குள்ள அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 
கனமழை காரணமாக பள்ளிக்கு நேற்று முன்தினம் விடுமுறை விடப்பட்ட நிலையில், வீட்டில் அவர் டி.வி.யை தொடர்ந்து பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த ராணி, புத்தகங்களை எடுத்து படிக்குமாறு கூறி கண்டித்துள்ளார். இதனால் தாய்-மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தற்கொலை
இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்து ராணி கடைக்கு சென்றபோது, தனியாக இருந்த அவரது மகள் ஐஸ்வர்யா திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதை கேட்டு மாணவியின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வீராணம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
சேலம் அருகே வீட்டில் டி.வி. பார்த்ததை தாய் கண்டித்ததால் விரக்தி அடைந்த 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்