நீர்வரத்து 73 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு ஒகேனக்கல் ஐந்தருவியை மூழ்கடித்தபடி செல்லும் வெள்ளம்

நீர்வரத்து 73 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு ஒகேனக்கல் ஐந்தருவியை மூழ்கடித்தபடி செல்லும் வெள்ளம்

Update: 2021-11-20 21:05 GMT
பென்னாகரம், நவ.21-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 73 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஐந்தருவிைய மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது.
கனமழை
வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழுமையாக நிரம்பின. அணைகளின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 20 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. 
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் ஐந்தருவி தெரியாத வகையில் பாறைகளை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 73 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனிடையே தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளதால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய் உள்ளிட்ட கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் வருகைக்கும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.  மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார், ஊர்காவல் படையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் தீயணைப்பு படையினரும், மீட்பு படையினரும் ஒகேனக்கல்லில் முகாமிட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்