ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து மலைபோல் நுரை வெளியேறியதால் சாலை துண்டிப்பு

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து மலைபோல் நுரை வெளியேறியதால் சாலை துண்டிப்பு

Update: 2021-11-20 21:05 GMT
ஓசூர்:
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து மலை போல் நுரை வெளியேறியதால் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ரசாயன கழிவுகள்
கர்நாடக மாநிலத்தில் தொடர் மழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று, வினாடிக்கு 2,563 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில், வினாடிக்கு 3,060 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மழைக்காலங்களில் கர்நாடக மாநில ஆற்றங்கரையோரங்களில் உள்ள தொழிற்சாலைகள், ரசாயன கழிவுகளை ஆற்றில் தொடர்ந்து வெளியேற்றி வருகின்றன. 
இதனால் தென்பெண்ணை ஆற்றுக்கு வரும் தண்ணீரில் ரசாயன கழிவுகள் கலந்து, நுரை பொங்கி, கெலவரப்பள்ளி அணை சுற்றுப்பகுதியில் மலைபோல் குவிந்துள்ளது. இதன் காரணமாக ஓசூரில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் தரைப்பாலம் நுரைகளால் மலை போல் குவிந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவதி
இதனால், தட்டகானபள்ளி, சித்தனப்பள்ளி, நந்திமங்கலம், பேரிகை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். மேலும், நுரை குவிந்திருப்பதால், பொதுமக்கள் தரைப்பாலத்தை கடக்காதவாறு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மலைபோல் குவிந்துள்ள நுரையை அகற்றி, அந்த வழியாக போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், தரைப்பாலத்தை மேம்பாலமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்