தேன்கனிக்கோட்டை அருகே கார் மரத்தில் மோதி டாக்டர் உள்பட 2 பேர் பலி நண்பர்கள் 2 பேர் படுகாயம்
தேன்கனிக்கோட்டை அருகே கார் மரத்தில் மோதி டாக்டர் உள்பட 2 பேர் பலி நண்பர்கள் 2 பேர் படுகாயம்
தேன்கனிக்கோட்டை, நவ.21-
தேன்கனிக்கோட்டை அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் டாக்டர் உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் அவர்களது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மரத்தில் கார் மோதியது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி சாலையை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகன் மஞ்சுநாத் (வயது22). இவர் பெங்களூருவில் மருத்துவ கல்லூரி ஒன்றில் மருத்துவம் படித்து விட்டு தனியார் மருத்துவமனையில் பணியாற்ற இருந்தார். இவரும், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ரங்கசந்திரம் கிராமத்தை சேர்ந்த பரத் (21), பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேதாந்து (21), பைபாஸ் சாலையை சேர்ந்த கோகுல் (22) ஆகிய 4 பேரும் நண்பர்கள்.
இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் காரில் பெங்களூருவுக்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் நள்ளிரவு 2 மணி அளவில் அவர்கள் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக தேன்கனிக்கோட்டை நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தனர். காரை கோகுல் ஓட்டி வந்துள்ளார்.
2 பேர் பலி
தேன்கனிக்கோட்டை தண்டரை அருகே கார் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பரத் சம்பவ இடத்திலேயே பலியானார். டாக்டர் மஞ்சுநாத், கோகுல், வேதாந்து ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு டாக்டர் மஞ்சுநாத் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய நண்பர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீசார் விரைந்து சென்று இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்தில் டாக்டர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.