அம்மாபேட்டை அருகே சிதிலமடைந்து காணப்படும் தொகுப்பு வீடுகள்; சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

அம்மாபேட்டை அருகே சிதிலமடைந்து காணப்படும் தொகுப்பு வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-11-20 21:00 GMT
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே சிதிலமடைந்து காணப்படும் தொகுப்பு வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தொகுப்பு வீடுகள்
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் கடந்த 1995-ம் ஆண்டு அரசு திட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. 
இதில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள கூலித்தொழிலாளிகள் குடியிருந்து வருகின்றனர். சுமார் 30 வீடுகளின் மேற்கூரை பெயர்ந்தும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டும் காணப்படுகிறது. 
மழைக்காலங்களில் அவ்வப்போது மேற்கூரைகள் சிறிது சிறிதாக பெயர்ந்து விழுந்து வந்துள்ளது. இந்தநிலையில் தொடர்ந்து அதே வீடுகளில் குடியிருக்கும் தொழிலாளிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். 
உயிர் பயம்
தற்போது தொடர் மழை பெய்து வருவதால், சிதிலமடைந்து காணப்படும் வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. எனவே அங்கு வசிக்கும் பொதுமக்கள் உயிர் பயத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக தொகுப்பு வீடுகளில் வயதானவர்களே பெரும்பாலும் வசிக்கிறார்கள். 
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்து இருப்பது தொடர்பாக ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. 
மழைக்காலமாக இருப்பதால் வீடு இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்குள் எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். இதேபோல் செல்லிகவுண்டனூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியிலும் சுமார் 15 வீடுகள் இதே நிலையில் காணப்படுகிறது. 
அந்த வீடுகளையும் சரி செய்து கொடுக்க வேண்டும்”, என்றனர்.

மேலும் செய்திகள்