நெல்லை திருமண்டல பிஷப் ஆக பர்னபாஸ் தேர்வு

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல புதிய பிஷப்பாக ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் இன்று பதவி ஏற்கிறார்.

Update: 2021-11-20 20:59 GMT
நெல்லை:
திருச்சி -தஞ்சை திருமண்டல பிஷப்பும், நெல்லை திருமண்டல பொறுப்பு பிஷப்புமான சந்திரசேகரன் கூறியதாவது:-
நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் பிஷப் பெயர் பட்டியல் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ், பீட்டர் தேவதாஸ், சுவாமிதாஸ் ஆகிய மூவர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தர்மராஜ் ரசாலம் தலைமையில் தேர்வு குழு கூட்டம் நடந்தது. இதில் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ் பிஷப் ஆக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் தற்போது பாளையங்கோட்டை கதீட்ரல் பேராலயத்தில் குருவானவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜாய் பர்னபாஸ். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

இதையடுத்து நெல்லை திருமண்டலத்தின் 16-வது பேராயராக பர்னபாஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணியளவில் பாளையங்கோட்டை கதீட்ரல் பேராலயத்தில் பதவி ஏற்கிறார். தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தர்மராஜ் ரசாலம் தலைமையில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் அருட்பொழிவு பெறுகிறார். அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரி கலையரங்கத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல லே செயலர் ஜெயசிங், ஞானதிரவியம் எம்.பி., குருத்துவ செயலாளர் பாஸ்கர் கனகராஜ் பொருளாளர் மனோகர், துணைத்தலைவர் சுவாமிதாஸ், ஜான்ஸ் கல்லூரி தாளாளர் கே.பி.கே.செல்வராஜ், மேரி சார்ஜென்ட் பள்ளி தாளாளர் ஆல்பிரட், கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாலமன் டேவிட், நல்லூர் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி தாளாளர் ஜெகன், சாராள் தக்கர் கல்லூரி முதல்வர் உஷா காட்வின், ஜான்ஸ் கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி, மத்திய சபை மன்ற தலைவர் ஜெயக்குமார், ஜெயராஜ் அன்னபாக்கியம் ஆஸ்பத்திரி மேலாளர் மில்டன் உள்பட பலர் உடனிருந்தனர்.


மேலும் செய்திகள்