இறந்த முதியவர் உடலை ஓடை வழியாக இடுப்பளவு தண்ணீரில் சுமந்துசென்ற அவலம்
இறந்த முதியவர் உடலை ஓடை வழியாக இடுப்பளவு தண்ணீரில் சுமந்துசென்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் ஒரு பிரிவினருக்கான சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டுக்கு இடையே செந்துறை பெரிய ஏரியில் இருந்து செல்லும் வடிகால் வாய்க்கால் உள்ளது. தொடர் மழை காரணமாக தற்போது பெரும்பாலான ஏரிகள் நிரம்பி ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தநிலையில் செந்துறை பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் முதியவர் ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டில் ஏற்பாடு செய்ய முடியாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த நிலையில் இறந்த முதியவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் தூக்கிச்சென்று அடக்கம் செய்தனர். சுடுகாட்டுக்குச் செல்லும் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.