சிறுமியை தாயாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
சிறுமியை தாயாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன்(வயது 42). கூலி தொழிலாளி. இவர் மனவளர்ச்சி குன்றிய ஒரு சிறுமியை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் கர்ப்பமடைந்த அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கிடையே ஊர் முக்கியஸ்தர் முன்னிலையில் அவருக்கும், அந்த சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்ததாகவும், பின்னர் சிறுமியுடன் வாழ மறுத்து அவரை, அவரது தாய் வீட்டிற்கு கொளஞ்சிநாதன் அனுப்பி வைத்துவிட்டதாகவும், சிறுமியின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து, கொளஞ்சிநாதனை கைது செய்தார்.