பட்டாசு தயாரிப்பில் சுப்ரீம்கோர்ட்டு வழிகாட்டுதலை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை-கலெக்டர் மேகநாதரெட்டி எச்சரிக்கை
பட்டாசு தயாரிப்பில் சுப்ரீம்கோர்ட்டு வழிகாட்டுதலை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மேகநாதரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர்,
பட்டாசு தயாரிப்பில் சுப்ரீம்கோர்ட்டு வழிகாட்டுதலை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மேகநாதரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆலோசனைக்கூட்டம்
பட்டாசு தயாரிப்பில் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல் பின்பற்றப்படுவது உறுதி செய்யும் பொருட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பட்டாசு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் கலெக்டர் மேகநாத ரெட்டி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுளை தயாரிக்கவும் சேமித்து வைக்கவும் விற்பனை செய்யவும் கூடாது என கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும் மேற்படி சுப்ரீம்கோர்ட்டு வழிகாட்டுதல் பின்பற்றப்படுவது உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக சிறப்பு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளபடும்.
நடவடிக்கை
சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புக்கு மாறாக பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்படும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய பட்டாசு ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தி சங்க நிர்வாகிகள் அனைவரும் கடைப்பிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கலந்துகொண்டவர்கள்
இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், மாவட்ட வருவாய் அலுவலர் ராமசுப்பிரமணியன், சிவகாசி சப்-கலெக்டர் பிரித்திவிராஜ், வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் கருணைபயபாண்டே, துணை கட்டுப்பாட்டு அலுவலர் பரமேஷ் குமார், மற்றும் ஆர்டி.ஓ.க்கள், பட்டாசு சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட டான்பாம்மா அமைப்பின் தலைவர் கணேசன் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-
ஒத்துழைப்பு
கலெக்டர் தெரிவித்தபடி சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை பின்பற்றுவது என்பதை உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் உறுதியாக எடுத்துக் கொண்டுள்ளது.எனவே மாவட்ட நிர்வாகத்திற்கு இப்பிரச்சினையில் எங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். மேலும் உச்ச நீதிமன்றமும் பட்டாசு தொழிலுக்கு எதிரான எந்த முடிவையும் எடுக்காது என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பட்டாசு தொழில் நலிவடையும் வாய்ப்பு கிடையாது. உரிமம் பெறாத சில பட்டாசு தயாரிப்பு மையங்களில் வெடி விபத்து ஏற்படுவது என்பது தவறான கருத்தை ஏற்படுத்துகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.