மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி

குடவாசல் அருகே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணியில் வேளாண்மைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Update: 2021-11-20 18:24 GMT
குடவாசல்;
குடவாசல் அருகே  மழையால்  பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணியில் வேளாண்மைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். 
கணக்கெடுப்பு பணி
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. குடவாசல் ஒன்றியத்தைச் சேர்ந்த மேலராமன்சேத்தி, அன்னவாசல் ஆகிய பகுதிகளில் குடவாசல் உதவி வேளாண்மை இயக்குனர் ஜெயப்பிரகாஷ் மற்றும் வேளாண்மை அதிகாரிகள் நேரில் சென்று முற்றிலும் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து கணக்கெடுத்தனர். ஆய்வின் போது பாதிக்கப்பட்ட பயிர்களை காப்பதற்கு தக்க ஆலோசனை வழங்கினர்.
மஞ்சள் நிறம்
அப்போது உதவி வேளாண்மை இயக்குனர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், பருவமழையால் சம்பா தாளடி நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டு சில இடங்களில் அழுகி திட்டு திட்டாக காணப்படுகிறது. இதற்கு அதே ரக நெல் நாற்று இருந்தால் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம். சற்று வயதான இளம் பயிர்கள் நீரில் மூழ்கியதால் பயிருக்கு தேவையான காற்றோட்ட வசதி குறைந்தும், மண்ணில் உள்ள சத்துக்களை தேவையான அளவு உறிஞ்ச இயலாத நிலையில் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. இதனை சரி செய்ய ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் ஆகியவற்றை 30 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். 
பதிவு செய்தனர்
மேலுரமாக ஏக்கருக்கு 16 கிலோ பொட்டாஷ் உரத்துடன் 22 கிலோ யூரியா 16 கிலோ ஜிப்சம் கலந்து இடவேண்டும் என கூறினார். ஆய்வின்போது குடவாசல் வேளாண்மை அலுவலர் வித்யானந்தபதி, உதவி வேளாண்மை அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட வேளாண்மை அலுவலர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து விவசாயி பெயர், சர்வே எண், பரப்பளவு ஆகியவற்றை, பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்