அடுத்த சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா ம க ஆட்சி அமைய வேண்டும் திண்டிவனம் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
அடுத்த சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என திண்டிவனத்தில் நடந்த பா ம க தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்
திண்டிவனம்
ஆலோசனை கூட்டம்
திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதி பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
தேர்தலில் தனியாக நிற்க வேண்டாம், நம்மிடம் சக்தி இல்லை, சக்தி இழந்து கிடக்கிறோம், ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என நீங்கள் வற்புறுத்தினீர்கள். இதனால் மாறி, மாறி கட்சிகளுடன் கூட்டணி வைத்து 20 எம்.எல்.ஏ.க்கள், 25 எம்.எல்.ஏ.க்கள், 18 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.பி.க்கள், 10 ஆண்டு காலம் 2 மத்திய அமைச்சர்கள் என பா.ம.க.வின் பலம் செல்வாக்கு உயர்ந்தது. அப்போது நீங்கள் சொன்னீர்கள் தனியாக நிற்க வேண்டாம் என நாங்கள் சொன்னது சரிதான் என்று. தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளில் 5 தொகுதியில் தான் வெற்றி பெற்றுள்ளோம்.
திண்ணை பிரசாரம்
உள்ளூர் புரிதலுக்கு விட்டுக்கொடுப்பது என தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் வேலை செய்து நம்முடைய கட்சிக்காரர்களே பா.ம.க.வுக்கு குழி பறித்தனர். இதனால் 2 தொகுதிகளை இழந்தோம். அந்த தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்து இருக்கும். அந்த வியாதி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்தது. இது தொடராமல் தடுப்பதற்கு ஒரே வழி திண்ணை பிரசாரம், சோசியல் மீடியா (செல்போன்) மூலமாக பிரசாரம் செய்வது தான்.
பலம் இழந்து விடுவோம்
கட்சியில் ஒரு சில பகுதிகளில் வேட்பாளரை நிறுத்துவதற்கு கூட ஆள் இல்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பலம் இழந்து விடுவோம். நம்முடைய பகுதியை மட்டும் சொல்லவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள நிலையைத்தான் சொல்கிறேன். ஏன் இந்தப் பின்னடைவு, பா.ம.க. தொண்டர்களின் வீரம், மானம் எங்கே போனது? பா.ம.க.வின் தொண்டனாக எப்போதும் இருப்பேன். உயிரே போனாலும் காசு வாங்க மாட்டேன் என்று இருப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
பா.ம.க. ஆட்சி
அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைக்க வேண்டும். அன்புமணிக்கு என்ன குறை உள்ளது. அவர் திறமையானவர். அவரது தலைமையில் பா.ம.க.வின் ஆட்சி அமைய வேண்டும்.
ஊர் ஊராகச் சென்று திண்ணை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். சோசியல் மீடியா கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும்.
நமது கட்சியை அனைவரும் ஆதரிக்க வேண்டும். எந்த கட்சிக்கும் சொந்தமில்லை, பந்தமில்லை. ஆனால் பா.ம.க.வுக்கு சொந்த பந்தம் உண்டு. அனைவரும் அன்புமணியின் தம்பிகள், தங்கைகள் என அவர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். வருங்காலம் நமதாக இருக்க வேண்டும். தமிழகத்திற்கு விடிவுகாலமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் எம்.பி. தன்ராஜ், பேராசிரியர் தீரன், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவகுமாா், , மாநில துணைத் தலைவர்கள் கருணாநிதி, சங்கர், மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட முன்னாள் செயலாளர் பிரபு, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுப்பராயலு, ராஜி, திண்டிவனம் நகர செயலாளர் பால்பாண்டியன், ரமேஷ், நகர முன்னாள் செயலாளர் சண்முகம், நிர்வாகிகள் ஜெயராஜ், சவுந்தர், செந்தில், பூதேரிரவி, ஒன்றிய செயலாளர்கள் வானூர் மகாலிங்கம், கதிர்வேல், மரக்காணம் ரகு, ஒன்றிய கவுன்சிலர்கள் மரக்காணம் விநாயகம், அம்புஜம் சுகுமார், வானூர் ராஜ்குமார், திண்டிவனம் நகர துணை செயலாளர் சத்யராஜ் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.