பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகர் தப்பல் உற்சவம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் நேற்று முன்தினம் கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது. பின்னர் இரவில் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது.
அதைத் தொடர்ந்து நேற்று கோவிலின் 4-ம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
வழக்கமாக அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும். கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தெப்பல் உற்சவம் நிகழ்ச்சி பிரம்ம தீர்த்த குளத்தில் நடந்தது.
முன்னதாக அம்பாளுடன் சந்திரசேகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க பிரம்ம தீர்த்த குளத்திற்கு கொண்டு வரப்பட்டு தீபாராதனை நடந்தது.
பின்னர் தெப்பல் உற்சவ நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நாளை (திங்கட்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெற உள்ளது.
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவ உலாவுடன் தீபத்திருவிழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.