பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளை ஆஜர்படுத்த தாமதம் ஏன் சி பி சி ஐ டி போலீசாருக்கு நீதிபதி கேள்வி

பெண் ஐ பி எஸ் அதிகாரி தொடர்ந்த பாலியல் வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளை ஆஜர்படுத்த ஏன் தாமதம் செய்கிறீர்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்

Update: 2021-11-20 17:50 GMT

விழுப்புரம்

பாலியல் புகார்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை கடந்த 11-ந் தேதி முதல் தொடங்கியது. அன்றைய தினமும், மறுநாளும் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
இவ்வழக்கு தொடர்பாக சில முக்கிய ஆவணங்களை கேட்டு ஒரு மனுவும், பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் குறுக்கு விசாரணை செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அந்த விசாரணை முடிந்த பின்னரே மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மற்றொரு மனுவும் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்கள் மீது அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவித்து பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இருவரும் ஆஜராகவில்லை

இம்மனுக்களின் மீதான விசாரணைக்காக நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். இதனை நீதிபதி கோபிநாதன் ஏற்றுக்கொண்டார்.
அதன் பிறகு டி.ஜி.பி. தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களின் மீதான விசாரணை நடந்தது. அப்போது டி.ஜி.பி. தரப்பு வக்கீல், இவ்வழக்கு தொடர்பாக மேலும் சில ஆவணங்களை தரும்படியும், பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் குறுக்கு விசாரணை முடிந்த பிறகே மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்தும்படியும் வாதிட்டார். அதற்கு அரசு தரப்பு வக்கீல் கலா, கடும் ஆட்சேபனை செய்து வாதிட்டார்.

டி.ஜி.பி. தரப்புக்கு கண்டனம்

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கோபிநாதன், டி.ஜி.பி. தரப்பில் ஏற்கனவே கேட்கப்பட்ட ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மூலம் வழங்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு முறையும் ஏதாவது ஆவணங்களை கேட்டு மனுதாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் குறுக்கு விசாரணை முடிந்த பிறகுதான் மற்ற சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை, எப்போது வேண்டுமானாலும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் குறுக்கு விசாரணை செய்யலாம் என்றார்.
அதன் பிறகு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கிட்டு, இவ்வழக்கு சம்பந்தப்பட்ட டைரியை வழங்கும்படி வாதிட்டார். அதற்கு வழக்கு சம்பந்தப்பட்ட டைரியை பார்க்க நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எப்படி ஒப்படைக்க முடியும் என்று நீதிபதி கோபிநாதன் கூறினார்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கேள்வி

மேலும் முதல் சாட்சியிடம் விசாரணை முடிந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும், மற்ற சாட்சிகளை ஏன் ஆஜர்படுத்தவில்லை, இவ்வழக்கை 3 மாதத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் சாட்சிகளை ஆஜர்படுத்த ஏன் தாமதம் செய்கிறீர்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நீதிபதி கோபிநாதன் கேள்வி எழுப்பினார். மேலும் அவர், எதிர்தரப்பு குறுக்கு விசாரணை நடத்தாவிட்டாலும் அரசு தரப்பு சாட்சி விசாரணை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று கூறி, மற்ற சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி உடனுக்குடன் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து இவ்வழக்கு தொடர்பாக அடுத்ததாக எந்த சாட்சியை ஆஜர்படுத்த உள்ளீர்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நீதிபதி கேட்டார். அதற்கு 3-வது சாட்சியான, ஏற்கனவே திருச்சியில் டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்தவரும் தற்போது சென்னை காவல்துறை தலைமையிடத்தில் நிர்வாகப்பிரிவு டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவருமான ஆனிவிஜயாவை ஆஜர்படுத்த உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

டி.ஐ.ஜி. ஆஜராக உத்தரவு

அதனை தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன், இவ்வழக்கின் விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்