சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மாடுகள் மீட்பு

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மாடுகள் பத்திரமாக மீட்கப்பட்டது.

Update: 2021-11-20 17:33 GMT
அண்ணாமலை நகர், 

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததையொட்டி மேட்டூர் அணையிலிருந்து கீழணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அந்த வகையில்  சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றின் வழியாக தினமும் வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. 

இதனால் கொள்ளிட கரையில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதற்கிடையே சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் கரை பகுதியில் உள்ள கீழக்குண்டலப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாடுகளை மேய்ச்சலுக்காக அக்கரைக்கு ஓட்டி சென்றிருந்தனர். 

திடீரென பழைய கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகரித்ததால் மேய்ச்சலுக்கு போன மாடுகள் அக்கரையில் சிக்கியது. இது குறித்து மாட்டின் உரிமையாளர்கள் வருவாய் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தந்தனர். 

படகில் வைத்து மீட்டனர்

அதன்பேரில், நேற்று காலை சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி தலைமையில் தாசில்தார் ஆனந்த்,  சிதம்பரம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பழனிச்சாமி, தீயணைப்பு வீரர்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் இணைந்து படகுகளில் சென்று அக்கரையில் சிக்கித்தவித்த நூற்றுக்கணக்கான மாடுகள் மற்றும் கன்றுகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 

இதில் கன்றுகுட்டிகளை படகில் வைத்தும், பெரிய மாடுகளை ஆழம் குறைவான பகுதியின் வழியாக கயறு கட்டியும் மீட்டனர்.

மேலும் செய்திகள்