வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

Update: 2021-11-20 17:30 GMT
கோவை 

1.1.2021-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. இதன் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது.  

இதையொட்டி வாக்காளர் பட்டியலை சரி பார்த்து பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. அதில் மொத்தம் 37,346 பேர் விண்ணப்பம் அளித்தனர். 

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் புலியகுளம் அரசு கலை கல்லூரி உள்பட 989 இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. இதில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய பொதுமக்கள் மனு அளித்தனர். 

 இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் வருகிற 30-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வாங்கப்படும்.

கடந்த வாரம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் அளித்தனர். பலர் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கின்றனர். இந்த வாரம் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

 வெளியூர் சென்றவர்கள் மற்றும் இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்காக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 27, 28-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்