மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் லிப்ட் வசதி ஏற்படுத்துவது எப்போது
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் லிப்ட் வசதி ஏற்படுத்துவது எப்போது
வடவள்ளி
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் ‘லிப்ட்’ வசதி ஏற்படுத்துவது எப்போது? என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
மருதமலை முருகன் கோவில்
முருகனின் 7-வது படைவீடாக கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் தினசரி அதிக எண்ணிக்கையில் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
மலைமேல் வீற்றிருக்கும் முருகனை தரிசிக்க பக்தர்கள் 700-க்கும் அதிகமான படிக்கட்டுகளை ஏறி செல்ல வேண்டி உள்ளது. எனவே பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேலே செல்ல கோவில் நிர்வாகம் சார்பில் மினிபஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
லிப்ட் வசதி
அந்த பஸ்கள், மலைமேல் கார் நிறுத்தும் பகுதி வரை மட்டுமே செல்லும். அதற்கு மேல் சாமி சன்னதிக்கு செல்ல பக்தர்கள் படிகளில் ஏறி செல்ல வேண்டி உள்ளது. இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.
எனவே பக்தர்கள் மலைக்கு மேல் செல்ல ரோப்கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அது தொடர்பாக வல்லுனர் குழு நடத்திய ஆய்வில் மருதமலையில் ரோப்கார் அமைக்க சாத்திய கூறுகள் இல்லை என்றும், ‘லிப்ட்’ வசதி ஏற்படுத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
பணிகள் நடக்கவில்லை
இதையடுத்து மருதமலையில் லிப்ட் வசதி ஏற்படுத்தப்படும் என்று கடந்த ஆட்சியில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்காக ரூ.3 கோடியே 38 லட்சம் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
இதையடுத்து கார் நிறுத்தும் பகுதியில் இருந்து ராஜகோபுரம் வரை செல்வதற்கும், அங்கிருந்து மீண்டும் கீழே இறங்குவதற்கும் லிப்ட் அமைக்க கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பூமிபூஜை நடைபெற்றது. ஆனால் அதன்பிறகு பணிகள் ஏதும் நடைபெறவில்லை.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருதமலை கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது அவர், திட்ட அறிக்கை முழுமையாக வந்த உடன் மருதமலையில் லிப்ட் அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். ஆனாலும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
பக்தர்கள் எதிர்பார்ப்பு
இது குறித்து கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) விமலா கூறுகையில், மருதமலையில் லிப்ட் அமைக்கும் பணிக்காக 2 முறை டெண்டர் விடப்பட்டது. ஆனால் ஒருவர் மட்டும் கலந்து கொண்டதால் டெண்டர் விடவில்லை. கூடுதலாக டெண்டர்தாரர்கள் கலந்து கொண்டால் அதில் ஒருவரை தேர்வு செய்து பணி வழங்க முடிவு செய்து உள்ளோம் என்றார்.
இதுகுறித்து பேரூர் சிவபக்தர்கள் நலச்சங்கத்தினர் கூறுகையில், மருத மலையில் லிப்ட் அமைக்க அதிகாரிகள்தான் முயற்சி எடுக்க வேண்டும். மேலும் மருதமலைக்கு தனி அதிகாரி நியமிக்க வேண்டும். பொறுப்பு அதிகாரி இருப்பதால் லிப்ட் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது என்றனர்.
கோவிலில் லிப்ட் வசதி ஏற்படுத்துவது தாமதமாகி வருவதால் முதிய வர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் அவதிப்படுகின்றனர். இதை தவிர்க்க லிப்ட் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.