பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி தண்ணீர் தொட்டியில் ஏறி ஆட்டோ டிரைவர் தற்கொலை மிரட்டல்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி தண்ணீர் தொட்டியில் ஏறி ஆட்டோ டிரைவர் தற்கொலை மிரட்டல்

Update: 2021-11-20 17:29 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி தண்ணீர் தொட்டியில் ஏறி ஆட்டோ டிரைவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆட்டோ டிரைவர்

பொள்ளாச்சி ஜோதிநகர் சி காலனியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சித்திக் (வயது 27). இவர் ஊத்துக்காடு ரோடு வழியாக ஆட்டோவில் வேகமாக சென்றதாக தெரிகிறது. அப்போது முன்னால் சென்ற காரை சித்திக் முந்த முயன்றதாக கூறப்படுகிறது. 

திடீரென்று ஆட்டோ கார் மீது மோதியது. இதையடுத்து காரில் இருந்த ஜோதி நகர் டி காலனியை சேர்ந்த மதன்குமார் (27) என்பவருக்கும், ஆட்டோ டிரைவர் சித்திக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 இதை தொடர்ந்து மதன்குமார் பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதற்கு சென்றார். இதை அறிந்த சித்திக் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றார்.

போலீசார் விசாரணை

இதை அறிந்த போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்த சித்திக் அங்கிருந்த மேல்நிலை தண்ணீர் தொட்டியின் மேல் ஏறினார். பின்னர் என் மீது வழக்குப்பதிவு செய்தால் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் அவரிடம் நைசாக பேசி கீழே வரவழைத்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது.  இதற்கிடையில் போலீசில் யாரும் புகார் கொடுக்காததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்