மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருக்கோவிலூர்,
தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலு, ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 23 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது. இதனால ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிவாரணம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு தனியார் திருமண மண்டபங்கலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நிலைமை சீராகும் வரை அவர்களுக்கு உணவு வழங்கப்படும். மாவட்ட நிர்வாகத்தோடு தி.மு.க.வினரும் இணைந்து இரவு, பகல் பாராமல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கரும்பு, பருத்தி, நெல், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களை கணக்கெடுத்து அரசுக்கு அனுப்பி வைக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சேதமடைந்த சாலைகளும் சீரமைக்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அய்யனார், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் கவுமன், வீரட்டகரம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.