தேனியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி
தேனியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
தேனி:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் இந்த தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நேற்று தொடங்கின.
ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பாப்பம்மாள்புரம் சமுதாயக்கூடத்தில் 1,000 கட்டுப்பாட்டு கருவிகள், 2 ஆயிரத்து 408 வாக்குப்பதிவு எந்திரங்கள், பகவதியம்மன் கோவில் சமுதாயக்கூடத்தில் 525 கட்டுப்பாட்டு கருவிகள், 1,022 வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் பயன்படுத்த தேவையான எந்திரங்களில் மட்டும் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நேற்று நடந்தன. அதன்படி, பாப்பம்மாள்புரத்தில் 549 கட்டுப்பாட்டு கருவிகள், 1,090 வாக்குப்பதிவு எந்திரங்கள், பகவதியம்மன் கோவில் சமுதாயக்கூடத்தில் 525 கட்டுப்பாட்டு கருவிகள், 1,022 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆகியவை சரிபார்க்கும் பணிகள் தொடங்கின.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதேனும் பழுது இருந்தால் அவற்றை தனியாக வைக்கவும், நல்ல நிலையில் உள்ள எந்திரங்களை மட்டும் தேர்தலில் பயன்படுத்த தேர்வு செய்யவும் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.