மரக்கிளைகளுடன் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை; தேனியில் பரபரப்பு

வருசநாடு அருகே 2 ஆயிரம் மரங்களை வனத்துறையினர் வெட்டியதை கண்டித்து மரக்கிளைகளுடன் தேனி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-20 17:05 GMT
தேனி:
வருசநாடு அருகே 2 ஆயிரம் மரங்களை வனத்துறையினர் வெட்டியதை கண்டித்து மரக்கிளைகளுடன் தேனி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெட்டப்பட்ட மரங்கள்
தேனி மாவட்டம் வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம், ஐந்தரைப்புலி, வட்டக்கானல் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் இலவம் பஞ்சு, கொட்டை முந்திரி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 3 கிராமப்புற பகுதிகளிலும் விவசாயிகள் நடவு செய்து பராமரித்து வந்த சுமார் 2 ஆயிரம் இலவம் மரங்களை வனத்துறையினர் நேற்று முன்தினம் வெட்டியதாக கூறப்படுகிறது. அப்போது மரங்களை வெட்டிக்கொண்டு இருந்த போது      விவசாயிகள் சிலர் அங்கு வந்தனர்.
அவர்கள் இதுகுறித்து கேட்டபோது, வனப்பகுதியில் மரங்கள் நட்டு வளர்த்ததால் வெட்டியதாக வனத்துறையினர் கூறினர். ஆனால், பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நிலத்தில் வளர்த்து வந்த மரங்களை வெட்டிவிட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால், வனத்துறை ஊழியர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
முற்றுகை போராட்டம்
இந்தநிலையில் அந்த 3 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு வனத்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு 30 விவசாயிகள் புகார் மனுக்கள் அளித்தனர். பின்னர் விவசாயிகள் அங்கிருந்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மினிவேன்களில் புறப்பட்டு வந்தனர். அந்த வேன்களில் வெட்டப்பட்ட சில மரங்களின் கிளைகளையும் எடுத்து வந்தனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு மரக்கிளைகள், மரக்கட்டைகளை குவித்து வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
பின்னர் விவசாயிகளுடன் வந்த தி.மு.க. பிரமுகர்கள் உள்பட சிலரை மட்டும் போலீசார் கலெக்டரை சந்திக்க அனுப்பி வைத்தனர். மற்ற விவசாயிகளும், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
போராட்டத்தின் போது, மரங்களை வெட்டிய வனத்துறை ஊழியர்களை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், இனி வரும் காலங்களில் விவசாயிகளுக்கு வனத்துறையினர் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதற்கிடையே கலெக்டர் முரளிதரனிடம் இந்த பிரச்சினை குறித்து முறையிட்ட தி.மு.க. பிரமுகர்கள் உள்பட சிலரிடம் 1 மணி நேரம் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட வனத்துறை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் இதுகுறித்து கலெக்டர் அலுவலக மேலாளர் ஜஸ்டின் சாந்தப்பா மற்றும் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பிரதிநிதிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இந்த விவரங்களை தெரிவித்தனர். ஆனால், அதை அவர்கள் ஏற்க மறுத்தனர்.
நடவடிக்கை
விவசாய சங்க பிரதிநிதிகளையும், கிராம மக்களையும் கலெக்டர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட வனத்துறை ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், கிராம மக்கள் சிலர் ஆகியோரை அழைத்து கலெக்டர் முரளிதரன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்வதோடு, மரங்களை வெட்டியவர்களை குறிப்பிட்ட நாட்களில் கைது செய்வதாகவும், சம்பவ இடத்தை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்