கொள்ளிடம் ஆற்றில் செங்கல் சூளைகள் மூழ்கின
அதிக அளவில் தண்ணீர் செல்வதால் கொள்ளிடம் ஆற்றில் செங்கல் சூளைகள் மூழ்கின. ஆற்றின் கரையையொட்டி உள்ள கிராமமக்களை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொள்ளிடம்:
அதிக அளவில் தண்ணீர் செல்வதால் கொள்ளிடம் ஆற்றில் செங்கல் சூளைகள் மூழ்கின. ஆற்றின் கரையையொட்டி உள்ள கிராமமக்களை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதிக அளவில் செல்லும் தண்ணீர்
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் கொள்ளிடம் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருவதால் ஆற்றின் கரையில் உள்ள நாதல்படுகை கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் செங்கல் சூளை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முகாமில் தங்க வைக்க ஏற்பாடு
தகவல் அறிந்ததும் சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன் தலைமையில் சீர்காழி தாசில்தார் சண்முகம், சீர்காழி துணை சூப்பிரண்டு போலீஸ்லாமேக், கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீசார் டிராக்டர் மூலம் கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி உள்ள அளக்குடி மற்றும் வெள்ளமணல் ஆகிய கிராமங்களுக்கு சென்று அங்கு உள்ளவர்களை சிறப்பு முகாமில் தங்குவதற்கு அழைப்பு விடுத்தனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.