மக்காச்சோள வயல்களில் காட்டுபன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை

மக்காச்சோள வயல்களில் காட்டுபன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை

Update: 2021-11-20 16:35 GMT
குண்டடம், 
குண்டடம் அருகே உப்பாறு அணை பகுதியில் மக்காச்சோள வயல்களில் காட்டுபன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
மக்காச்சோளம் சாகுபடி
குண்டடம் அருகே உப்பாறு அணையை ஒட்டிய பகுதிகளான கள்ளிவலசு, ஒட்டபாளையம், பெல்லம்பட்டி மருதூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்து கதிர்விடும் தருணத்தில் உள்ளது. 
இந்த நிலையில் ஒட்டபாளையம், பெல்லம்பட்டி பகுதிகளில் உப்பாறுஅணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில், குறிப்பாக மக்காச்சோள வயல்களுக்கு இரவு நேரங்களில் படையெடுத்து வரும் காட்டுப்பன்றிகள் வளர்ந்து நிற்கும் மக்காச்சோள பயிர்களை கடித்தும், மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக மக்காச்சோள வயல்களில் விவசாயிகள் காவல்காத்து வருகின்றனர்.
காட்டுப்பன்றிகள்
இதுபற்றி ஒட்டபாளையத்தை சேர்ந்த மக்காச்சோள விவசாயி, பாஸ்கரன் கூறும்போது, உப்பாறுஅணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து தண்ணீர் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் வசித்து வந்த காட்டுப் பன்றிகள் விவசாய வயல்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டன. 
தற்போது இந்தப் பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள வயல்களில் புகுந்து சேதப்படுத்தியுள்ளது. 
இதனால் விவசாயிகள் செய்வதறியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதைத் தடுக்கும் நோக்கில் கடந்த 2நாட்களாக இரவில் மக்காச்சோள வயல்களில் காவல் காத்து வருகிறோம். எனவே வனத்துறையினர் இந்தப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு காட்டுப்பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம், என்றார்.

மேலும் செய்திகள்