மேலும் 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்
மேலும் 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்;
தாராபுரம்,
தாராபுரம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாலிபர் கொலை
தாராபுரம் உடுமலை சாலையில் திருமலைப்பாளையம் பகுதியில் உள்ள காலி வீட்டுமனை இடத்தில் கடந்த அகஸ்டு மாதம் 18 ந்தேதி உடலில் வெட்டு காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய அலங்கியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியைச் சேர்ந்த விக்ணேஷ் (வயது 25) என்பது தெரியவந்தது.
இந்தக் கொலை தொடர்பாக விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்த ஏஞ்சல் செல்வம் என்ற செல்வம் (23), அதே பகுதியை சேர்ந்த கேடி மணி என்ற மணிகண்டன் (23), பாண்டியன் நகரைச் சேர்ந்த பன்னி பாஸ்கர் என்ற பாஸ்கர் (35) சிவகாசியை சேர்ந்த குண்டு காளி என்ற குருசங்கர்காளி (36) அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்ற ரமேஷ் (33), மதுரை பொன்னாகரம் கேசவன் (30), அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்ற சங்கரநாராயணன் (36) ஆகிய 7 பேர் உள்பட 13 பேரை அலங்கியம் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் 2 பேர்
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சகாங் சாய் உத்தரவின்பேரில் தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு மேற்பார்வையில், தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மேற்கூறிய 7 பேர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டார். இதில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட ஏஞ்சல் செல்வம், மணிகண்டன், பன்னி பாஸ்கர், குருசங்கர் காளி, ரமேஷ்குமார் ஆகிய 5 பேர் மீது போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
மேலும் மதுரை பொன்னாகரம் ஜோதிவேல் மகன் கேசவன் (30), அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் சங்கர் என்ற சங்கரநாராயணன் (36) ஆகிய 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.