விடுபட்ட பயனாளிகளுக்கும் மாற்று இடம் வழங்க வேண்டும்

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி விடுபட்ட பயனாளிகளுக்கும் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தாசில்தாரிடம், கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2021-11-20 14:12 GMT
கூடலூர்

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி விடுபட்ட பயனாளிகளுக்கும் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தாசில்தாரிடம், கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாற்றிடம் வழங்கும் திட்டம்

முதுமலை ஊராட்சி மற்றும் பெண்ணை கிராமம் புலிகள் காப்பக வனத்தில் உள்ளது. இங்கு வசிக்கும் மக்களை மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் வேறு இடத்தில் குடியமர்த்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து முதற்கட்டமாக 235 பேரும், 2-வது கட்டமாக 255 பேரும், 3-வது கட்டமாக 168 பேரும் மாற்றிடம் வழங்கி வனத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். 

சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

இந்த நிலையில் பெண்ணை கிராமத்தை சேர்ந்த  40 பேர்  மட்டும் மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் இடம் பெறவில்லை. உடனே சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் விடுபட்டவர்களை 6 வாரங்களுக்குள் ஆவணங்கள் மற்றும் தகுதி அடிப்படையில் சேர்க்க வேண்டும் என்று கடந்த 12-ந் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பெண்ணை கிராம மக்கள் நேற்று கூடலூர் தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். 

நடவடிக்கை எடுப்பதாக உறுதி

பின்னர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து ஐகோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்தி விடுபட்ட பயனாளிகளை மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.மேலும் ஐகோர்ட்டு உத்தரவு நகலை வழங்கினர். 

அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி உறுதி அளித்தார். இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறும்போது, மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும்போது ஆன்லைனில் பெயர் விடுபட்டு உள்ளது. இதனால் உடனடியாக சேர்க்க முடியவில்லை. உரிய ஆய்வின் அடிப்படையில் விடுபட்ட பெயர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

மேலும் செய்திகள்