பெற்றோர் இல்லாமல் கதவை பூட்டிக்கொண்டு தனியாக தூங்கிய 2½ வயது குழந்தை
பெற்றோர் இல்லாமல் கதவை பூட்டிக்கொண்டு தனியாக தூங்கிய 2½ வயது குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.;
சென்னை,
சென்னை தேனாம்பேட்டை பார்த்தசாரதி பேட்டை தெருவை சேர்ந்தவர் தம்பித்துரை. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது 2½ வயது ஆண் குழந்தை அகன் முத்துச்செழியன். நேற்று மாலை குழந்தை அகன் முத்துச்செழியன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். பிறகு வீட்டின் படுக்கை அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு தனியாக உறங்கிவிட்டான். சிறிது நேரம் கழித்து படுக்கை அறையின் கதவை குழந்தையின் பெற்றோர் திறக்க முயன்றனர். கதவு உள்பக்கமாக பூட்டபட்டிருந்ததால், அவர்களால் திறக்க முடியவில்லை. இதற்கிடையில் தூக்கத்தில் இருந்து விழித்த குழந்தை அகன் முத்துச்செழியன் கதவை திறக்க முயன்றான்.
ஆனால் அவனாலும் திறக்க முடியாததால் பயத்தில் பூட்டிய அறைக்குள் இருந்து வெளியே வரமுடியாமல் கதறி அழுதான். சில நிமிட போராட்டத்துக்கு பிறகு குழந்தையின் பெற்றோர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து நிலைய அலுவலர் வெள்ளச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.
பின்னர் நவீன எந்திரம் (டோர் ஓப்பனர்) மூலம் கதவை உடைக்காமல், லாவகமாக திறந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். சுமார் ஒரு மணி நேரம் பூட்டிய அறைக்குள் பரிதவித்த குழந்தையை தீயணைப்பு வீரர்கள் மீட்ட சம்பவம் அந்த பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.