கார்த்திகை திருவிழாவையொட்டி கோவில்களில் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் 1,008 தீபங்கள் ஏற்றப்பட்டது
கார்த்திகை திருவிழாவையொட்டி கோவில்களில் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் 1,008 தீபங்கள் ஏற்றப்பட்டது
நாமக்கல்:
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கோவில்களில் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். நாமக்கல் ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் 1,008 தீபங்கள் ஏற்றப்பட்டது.
1,008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி
நாமக்கல்லில் கார்த்திகை தீப திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண்கள் வீடுகள், தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். நாமக்கல் ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் நேற்று 1,008 தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றினர்.
நாமக்கல் பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் 1,008 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. காலையில் மகா சங்கல்பமும், கணபதி பூஜையும் நடந்தது. பின்னர் பால தண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு 1,008 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் வைக்கப்பட்டு இருந்த விளக்குகளில் பெண்கள் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.
கூம்பு கொளுத்தினர்
இதேபோல் நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில், சந்தைபேட்டை புதூர் செல்வவிநாயகர் கோவில், தட்டாரத்தெரு ஏகாம்பர ஈஸ்வரர் காமாட்சி அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. இதில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
மேலும் நகர் முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீதிகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு இருந்ததை காண முடிந்தது. பெரும்பாலான கோவில்களின் முன்பு கூம்பு (சொக்கப்பனை) கொளுத்தப்பட்டது. சுற்றிலும் நின்ற பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு உப்பை தூவினர். மேலும் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.
மோகனூர்
மோகனூர் பகுதிகளில் கார்த்திகை தீபவிழாவையொட்டி அசலதீபேஸ்வரர் கோவில், வெங்கட்ரமண பெருமாள் கோவில், காந்தமலை முருகன் கோவில், மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவில், எஸ்.வாழவந்தி புன்னைவனநாதீஸ்வரர் கோவில், சிங்காரபாறை விநாயகர் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதையடுத்து மலர் அலங்காரம் செய்து பூஜை நடைபெற்றதுடன், கோவில் முன்புள்ள உயரமான தூண்களில் திருக்கோடி ஏற்றப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.