ஓசூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை வீட்டு சுவர் இடிந்து 3 வயது சிறுவன் பலி 11 பேர் படுகாயம்

ஓசூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழைக்கு வீட்டு சுவர் இடிந்து 3 வயது சிறுவன் பலியானான். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-11-20 04:39 GMT
ஓசூர்:
ஓசூரில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழைக்கு வீட்டு சுவர் இடிந்து 3 வயது சிறுவன் பலியானான். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
வீட்டு சுவர் இடிந்து விழுந்தது 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. ஓசூரில் இடை விடாமல் பெய்த கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறியது. மேலும் பலத்த மழையால் ஏராளமான வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன.
ஓசூர் அருகே சிகரலப்பள்ளி கேட், பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். தச்சு தொழிலாளி. இவரது குடிசை வீட்டில் மனைவி பூலட்சுமி (வயது22), மகன் நந்தீஷ் (3), 1½ மாத குழந்தை, உறவினர் சுமித்ரா உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இருந்தனர். இரவு பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து இவரது வீட்டின் மீது விழுந்தது.
சிறுவன் பலி 
இதில் சிறுவன் நந்தீஷ் பலியானான். பூலட்சுமி, 1½ மாத குழந்தை, சுமித்ரா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தார்கள். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
8 பேர் படுகாயம் 
சூளகிரி அருகே உங்கட்டியை சேர்ந்தவர் அப்பையா (55). இவர் குடும்பத்துடன் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பெய்த கன மழையில் அவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் அப்பையா, அவரது மனைவி கதிரம்மா (50), மகள் சுகன்யா (22), மருமகன் சந்தோஷ் (25), மகள் தனுஸ்ரீ (1), உறவினர் குழந்தைகள் பிரவீன் (11), புவனேஸ் (8) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஓசூர் சுண்ணாம்புஜூபியை சேர்ந்தவர் ரவி (51). பால் பாக்கெட் விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பாகலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள மரம் அவர் மீது விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு அவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்