கிருஷ்ணகிரி மாவட்டத்தை புரட்டி போட்ட கனமழை 374 வீடுகள் இடிந்து சேதம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தை புரட்டி போட்ட கனமழைக்கு 374 வீடுகள் இடிந்து சேதமடைந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம் ஆனது.

Update: 2021-11-20 04:39 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தை புரட்டி போட்ட கனமழைக்கு 374 வீடுகள் இடிந்து சேதமடைந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம் ஆனது.
கொட்டி தீர்த்த கனமழை 
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததின் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. கடந்த 17-ந் தேதி இரவு முதல் நேற்று காலை வரை விடாமல் மாவட்டம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றிலும், அதன் கிளை நதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கின்றது. 
மார்கண்டேய நதியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் தென்பெண்ணை ஆற்றிலும், ஆந்திர மாநில ஓதிகுப்பம் ஏரி நிரம்பி உபரிநீர் பாம்பாற்றிலும் பெருக்கெடுத்து செல்கின்றது. இந்த கன மழையால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைகள் நிரம்பி, தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கின்றது.
வெள்ள அபாய எச்சரிக்கை 
நேற்றைய நிலவரப்படி கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து  வினாடிக்கு 3,500 கன அடியாகவும், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 600 கன அடியாகவும், பாம்பாறு அணைக்கு வினாடிக்கு 8,123 கனஅடியாகவும் இருந்தது. அணைகளின் பாதுகாப்பு கருதி கெலவரப்பள்ளி அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியும், கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியும், பாம்பாறு அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்று கரையோரம் வசிக்க கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் அறிவிப்பு வழங்கி வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
4 பேர் பலி 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழைக்கு இதுவரையில் 4 பேர் பலியாகி உள்ளதாகவும், குடிசை வீடுகள் உள்பட மொத்தம் 374 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் 120 எக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. பயிர் சேத விவரம் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறி உள்ளது.  குறிப்பாக கிருஷ்ணகிரி நகரில் பழையபேட்டை, செட்டியம்பட்டி, பெரியார் நகர், தேவசமுத்திரம், அக்ரஹாரம், முல்லை நகர் பகுதியில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளன. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாத நிலை உள்ளது. அந்த நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
மேலும் கிருஷ்ணகிரி அணைக்கு செல்லும் சாலை முழுவதும் முட்டளவுக்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் சேதமடைந்தன. ஊத்தங்கரை பரசனை ஏரி நிரம்பி உபரிநீர் அண்ணா குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இதனால் 200-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி தவித்தனர். அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார்கள்.
இதேபோல சூளகிரி அருகே அட்டூர் பகுதியில் மழையால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பாக அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் ஓசூர் பேகேப்பள்ளி - பாகூர் சாலையில் தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆற்றின் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை-சிங்காரப்பேட்டை சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்று பாதையில் செல்கின்றன.
3 பேர் உயிர் தப்பினர்
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு செல்லும் இடத்தில் மின் கம்பம் சாய்ந்தது. உடனடியாக மின்சார ஊழியர்கள் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். பர்கூர் அருகே கொண்டப்பநாயக்கனப்பள்ளி அருகே உள்ள ஜி.நாகமங்கலத்தை சேர்ந்த லட்சுமி (35) என்பவர் தனது 2 குழந்தைகளுடன் இரவு தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

மேலும் செய்திகள்