சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்-இன்றும், நாளையும் நடக்கிறது

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்று முதல் 2 நாட்கள் நடைபெறுகிறது.

Update: 2021-11-19 22:49 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்று முதல் 2 நாட்கள் நடைபெறுகிறது.
சிறப்பு முகாம்கள்
இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2022-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்திற்குட்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.
அதன்படி, சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஏற்கனவே கடந்த 13 மற்றும் 14-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தத்திற்காக படிவங்கள் பெறப்பட்டன.
2 நாட்கள் நடக்கிறது
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் மாவட்டத்தில் உள்ள 1,216 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும். 
இதுதவிர ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை), 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் வருகிற 30-ந் தேதி வரை பெறப்பட்டு 5.1.2022 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்