மேட்டூருக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2021-11-19 22:08 GMT
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்
வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஐந்தருவி பகுதிகளில் பாறைகளை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
ஒகேனக்கல்லுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து இருக்கிறது. நீர்வரத்தை கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர்
நீர் வரத்து அதிகரித்ததால் கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் மேட்டூர் அணை 120 அடியை எட்டி நிரம்பியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரிநீர் அணைக்கு வரும் நீர் வரத்தின் அடிப்படையில் திறந்து விடப்பட்டு வருகிறது. 
இதன் அடிப்படையில் நேற்றுமுன்தினம் 18-ந் தேதி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இரவு 10 மணிக்கு வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து இரவில் மேட்டூருக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகமானது.
கால்வாய் பாசனம்
இதன் காரணமாக அணையில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியும், 16 கண்மதகுகள் வழியாக வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியும் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
 இந்த சூழ்நிலையில் கால்வாய் பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை முற்றிலும் குறைந்துள்ளது. இதன் காரணமாக நேற்று காலை முதல் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக இருந்தது.

மேலும் செய்திகள்