போலி பத்திரங்கள் தயாரித்து விற்ற பெண் உள்பட 5 பேர் கைது
பெங்களூருவில் போலி பத்திரங்கள் தயாரித்து விற்ற பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.63½ போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் போலி பத்திரங்கள் தயாரித்து விற்ற பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.63½ போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
5 பேர் கைது
பெங்களூருவில் போலி பத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவது தொடர்பாக அல்சூர்கேட், எஸ்.ஜே.பார்க், எச்.ஏ.எல். போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்குகள் பதிவாகி இருந்தது. இந்த மோசடியில் ஈடுபடும் கும்பலை பிடிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. தனிப்படை போலீசார், போலி பத்திரங்கள் தயாரித்து விற்ற கும்பல்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வந்தனர்.
இந்த நிலையில், கோவிந்தபுரா போலீசார், போலி பத்திரங்கள் தயாரித்து விற்ற ஒரு பெண் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் விவேக்நகரை சேர்ந்த உசேன் மோதி பாபு(வயது 58), பாபுஜிநகரை சேர்ந்த சீமா(45), சாமண்ணா கார்டனை சேர்ந்த நயாஜ் அகமது(45), விஜயநகரை சேர்ந்த சபீர் அகமது(38), பசவேசுவராநகரை சேர்ந்த ஹரீஷ் என்ற சுப்பராயா(55) ஆகியோர் ஆவர்.
போலி பத்திரங்கள் விற்பனை
இவர்களில் போலி பத்திரங்களை தயாரித்து விற்றதில் மூளையாக செயல்பட்டவர் உசேன் ஆவார். இவர், பத்திரங்களை விற்பனை செய்வதற்கு அரசிடம் முறையான அனுமதி எதுவும் பெறவில்லை. மாறாக அந்த பத்திரங்களை அரசின் முத்திரைகளை பயன்படுத்தி தயாரித்து விற்பனை செய்துவந்துள்ளார். சார் பதிவாளர் அலுவலகங்களில் விற்கப்படும் பத்திரங்கள், பிற பாண்டு பத்திரங்களுக்கும், இவர்கள் தயாரிக்கும் போலி பத்திரங்களுக்கும் சிறிய அளவில் கூட வித்தியாசம் இல்லாமல் தயாரித்து விற்று வந்துள்ளனர்.
இவ்வாறு விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கும், வருவாய்த்துறைக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
ரூ.63½ லட்சம் மதிப்பு
கைதானவர்களிடம் இருந்து போலி பத்திரங்கள், பாண்டு பத்திரங்கள், போலி முத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.63½ லட்சம் ஆகும்.
கைதான 5 பேர் மீதும் கோவிந்தபுரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவாகி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கும்பலை பிடித்த போலீசாருக்கு ரூ.50 ஆயிரம் வெகுமதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவலை போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்தார்.