புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2021-11-19 20:52 GMT
தொல்லை தரும் நாய்கள் 
ராமநாதபுரம் நகரில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்கள் சாலையின் நடுவே ஆங்காங்கே படுத்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. மேலும் தெருவில் நடந்து செல்பவர்களை நாய்கள் துரத்தி, துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் வெளியில் செல்லவே அச்சம் அடைகின்றனர். பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கிருஷ்ணன், ராமநாதபுரம்.
சாலையை சீரமைப்பார்களா? 
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா வெளியாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொங்கரத்தி கிராமத்தில் இருந்து கண்டரமாணிக்கம் செல்லும் சாலையை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் ஆங்காங்கே மேடு பள்ளமாக உள்ளது. சாலையின் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம், மேடு தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ரஞ்சித், கொங்கரத்தி. 
தேங்கி நிற்கும் மழைநீர் 
மதுரை மாநகராட்சி 4-வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் ஒய்.எம்.சி.ஏ. காலனி பகுதியிலுள்ள சாலையில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், மதுரை.
தெருவிளக்குகள் தேவை 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சியில் உள்ள தொகுப்பு வீட்டு காலனி முதல் தெருவில் தெருவிளக்குகள் இல்லை. இதன் காரணமாக இப்பகுதியில் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். மேலும் சில மின்வயர்கள் வீடுகளை ஒட்டியவாறு செல்கிறது. இதனால் குழந்தைகள் அதனை தொட்டுவிடும் அபாயம் உள்ளது. எனவே, இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், திருத்தங்கல். 
வேகத்தடை வேண்டும் 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா முடங்கியார் ரோட்டில் தாலுகா ஆபீஸ் செல்லும் ரோடு, நீதிமன்றத்திற்கு செல்லும் ரோடு மற்றும் காந்தி சிலைக்கு செல்லும் ரோடு ஆகிய மூன்று ரோடுகள் சந்திக்கும் சாலை உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். 
ராமச்சந்திரன், ராஜபாளையம்.
சேதமடைந்த சுகாதார வளாகம் 
விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் அடுத்து உள்ள ஒ.முத்துலாபுரம் ஊராட்சியில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த கட்டிடம் தற்போது சேதமடைந்துள்ளதால் பெண்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயன்பாடின்றி கிடக்கும் சுகாதார வளாகத்தை சீரமைத்து தர வேண்டும். 
கோபி, ஒ.முத்துலாபுரம்.
சாக்கடை கால்வாயில் அடைப்பு 
மதுரை கோச்சடை முத்தையா கோவில் 2-வது தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
-கண்ணன், கோச்சடை.
மாடுகளால் விபத்து 
மதுரை மாவட்டம் ஒத்தகடையிலிருந்து திருவாதவூர் செல்லும் சாலையில் இரவு நேரத்தில் மாடுகள் ஆங்காங்கே சாலையில் சுற்றி திரிகின்றன. சில மாடுகள் சாலையின் நடுவில் படுத்து தூங்குகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பார்த்திபன், புதுத்தாமரைப்பட்டி. 
குண்டும், குழியுமான சாலை 
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த வாடிப்பட்டி, சாத்தியார் அணை செல்லும் சாலை குண்டு்ம், குழியுமாக உள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வாகனங்களும் இவ்வழியாக செல்லும் போது பழுதாகி விடுகின்றன. அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி குண்டும், குழியுமான இந்த சாலையை சரிசெய்ய வேண்டும். 
-குணசேகரன், தெத்தூர். 

மேலும் செய்திகள்