திருப்பரங்குன்றம் மலையில் ஜொலித்த கார்த்திகை மகா தீபம்

திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகா தீபம் ஜொலித்தது. அதை கண்டு அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர்;

Update:2021-11-20 02:21 IST
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகா தீபம் ஜொலித்தது. அதை கண்டு அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர்
திருக்கார்த்திகை திருவிழா
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முக்கியம் வாய்ந்ததாகும். இந்தத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 
திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்றுமுன்தினம் முருகப்பெருமானுக்கு கிரீடம் சூட்டி நவரத்தினங்களான செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது
மலையில் மகாதீபம்
இதனையொட்டி மலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள தீபமேடையில்  3½ அடி உயரமும், 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரை வைக்கப்பட்டது. பின்னர் அதில் 350 கிலோ நெய் ஊற்றப்பட்டது. மேலும் அதில் நெய்யினால் பதப்படுத்தப்பட்ட 150 மீட்டர் கடாதுணியிலான திரி , 5 கிலோ கற்பூரம் ஆகியவை நிரப்பி தயார்படுத்தப்பட்டது. 
இந்த நிலையில் கோவிலுக்குள், மலையிலுமாக சமகாலத்தில் சிவாச்சாரியார்கள் தீப பூஜைகளை செய்தனர். இந்த நிலையில் கோவிலுக்குள் பெரிய மணி அடித்தது. அதன் ஒலி கேட்டு கோவிலுக்குள் பாலதீபம் ஏற்றப்பட்டது. இதேவேளையில் வாண வேடிக்கைகளுடன் மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. தீபமானது 10 அடி உயரத்திற்கு சுடர் விட்டு எரிந்து ஜொலித்தது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 
மலையில் மகா தீபத்தை கண்டதும் கோவில் மற்றும் நகர பகுதியில் கூடி இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்கள் எழுப்பி தீப தரிசனம் செய்தனர்.
சொக்கப்பனை
மேலும் மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கடைவீதி எங்கும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதேபோல திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளில் வீடுகள் முழுவதுமாக அகல்விளக்குகள் ஏற்றப்பட்டது.
 மலையில் தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோவில் வாசல் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று(சனிக்கிழமை) தீர்த்த உற்சவம் நடக்கிறது.

மேலும் செய்திகள்