கார்கள் மோதி விபத்து: தாய், மகள் உள்பட 3 பேர் சாவு
பெங்களூருவில் 2 கார்கள் மோதிய விபத்தில் தாய், மகள் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெங்களூரு: பெங்களூருவில் 2 கார்கள் மோதிய விபத்தில் தாய், மகள் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 கார்கள் மோதல்
பெங்களூரு சிக்கஜாலா, பெட்ட அலசூரு அருகே விமான நிலைய ரோட்டில் நேற்று முன்தினம் இரவு ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது அதே ரோட்டில், விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவை நோக்கி ஒரு கார் வந்தது. இந்த நிலையில், விமான நிலையத்தில் இருந்த வந்த காரில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியை இடித்து தள்ளிவிட்டு எதிர்ரோட்டிற்கு கார் வந்தது.
அப்போது விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது அந்த கார் மோதியது. இதில், 2 கார்களும் அப்பளம் போல நொறுங்கி முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் விமான நிலையத்தை நோக்கி சென்ற காரில் இருந்த 2 பெண்கள் மற்றும் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.
தாய், மகள் சாவு
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிக்கஜாலா போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். போலீஸ் விசாரணையில் விபத்தில் பலியானவர்கள் பூர்ணிமா ரவீந்திரா, அவரது மகள் லட்சுமி மற்றும் கார் டிரைவரான மஞ்சுநாத் என்று உடல் அடையாளம் காணப்பட்டது.
படுகாயம் அடைந்த 2 பேரின் பெயர்கள் பரத் மற்றும் விகாஷ் என்று தெரியவந்துள்ளது. முன்னதாக பலியான 3 பேரின் உடல்களை காருக்குள் இருந்து வெளியே எடுக்க மிகுந்த சிரமம் ஏற்பட்டது. கியாஸ் கட்டர் மூலமாக காரின் பாகங்கள் வெட்டி அகற்றி 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு இருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வந்த காரை, டிரைவர் அதிவேகமாக ஓட்டியதே விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிக்கஜாலா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.